வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 117 பேர் கைது
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, தென்காசியில் சாலைமறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 117 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தென்காசி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று காலையில் காங்கிரஸ் கட்சியினர் திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது அங்கு காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மாநில காங்கிரஸ் தொழிலாளர் நல யூனியன் பொதுச்செயலாளர் செங்கை கண்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
117 பேர் கைது
சாலைமறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி நாடார், மாநில பொதுச்செயலாளர் சட்டநாதன், தென்காசி நகர தலைவர் காதர் முகைதீன் மற்றும் 25 பெண்கள் உள்ளிட்ட 117 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அப்போது காயம் அடைந்த செங்கை கண்ணனை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று போலீசாரிடம் காங்கிரசார் முறையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செங்கை கண்ணனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.