ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
லாலாபேட்டை,
நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேக பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும். அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள்.
தானத்தில் மிக உயர்ந்ததாக கூறப்படுவது அன்னதானம் மட்டுமே. ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அன்னாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்டம், லாலாபேட்டை சிவன்கோவில் சுவாமி அன்னதானத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கருவறையில் இருந்த அன்னங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
தோகைமலை அருகே கழுகூர் கஸ்பாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், தேன், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பூஜை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகள் 16 பட்டியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே நன்செய்புகளூரில் பிரசித்த பெற்ற மேகபாலீஸ்வரர்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவபெருமானுக்கு அன்னம் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் நன்னீயூர்புதூர் சிந்தாமணி சிவாம்பிகை ஈஸ்வரன் கோவில், தோட்டக்குறிச்சி சொக்கநாதர் கோவில், திருமா நிலையூர் சவுந்திரநாயகி ஈஸ்வரன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.