ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2020-11-01 00:24 GMT
புதுக்கோட்டை, 

நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேக பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும். அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதை அன்னாபிஷேகம் என்கிறார்கள்.

தானத்தில் மிக உயர்ந்ததாக கூறப்படுவது அன்னதானம் மட்டுமே. ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அன்னாபிஷேகம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரகதாம்பாள் கோவிலில் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. மேலும் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதேபோல பிரகதாம்பாளுக்கு காய்கனிகள் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

சாமி தரிசனம்

இதேபோல திருக்கோகர்ணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள சாந்தநாத சாமி கோவிலிலும் சாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீரனூர்

கீரனூர் சிவன் கோவிலில் உள்ள உத்தமர் சாமிக்கு 200 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர் அன்னாபிஷேகம் உணவுகளை சிறிய பொட்டலங்களாக பக்தர்களுக்கு வழங்கப் பட்டது

வடகாடு

வடகாடு அருகே உள்ள மாங்காட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த விடங்கேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் மாங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கீரமங்கலம்

கீரமங்கலத்தில் 84 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிவன் சிலை மற்றும் தலைமைப்புலவர் நக்கீரர் சிலைகளுடன் அமைந்துள்ள மிகப்பழமையான மெய்நன்றநாதர் சுவாமி ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பிரமாண்ட லிங்கத்திற்கு அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு காய், கனி, மலர்தோரணங்களாக அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விராலிமலை-திருமயம்

விராலிமலை சந்தைப்பேட்டை அருகே வன்னி மரத்து அடியில் உள்ள வன்னீஸ்வரர் மற்றும் பஞ்சலிங்க மூர்த்தி ஆகிய தெய்வங்களுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இதேபோல் திருமயத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு, பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் சுற்றுபகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்