கலபுரகி டவுனில் கார் வியாபாரி கடத்தி கொலை; ஆற்றில் உடல் வீச்சு - பணத்தகராறில் தீர்த்துக்கட்டிய 3 பேர் கைது

கலபுரகி டவுனில், கார் வியாபாரியை கடத்தி கொன்று உடலை ஆற்றில் வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2020-10-31 22:15 GMT
கலபுரகி,

கலபுரகி டவுன் ரோஜா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யதுல்லா காலனியில் வசித்து வந்தவர் முகமது கவுசுதீன்(வயது 45). இவர் பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற முகமது அதன்பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் முகமதுவின் செல்போனுக்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் முகமதுவை அவரது நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முகமது மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் ரோஜா போலீஸ் நிலையத்தில் முகமதுவின் குடும்பத்தினர் புகார் கொடுத்து இருந்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் மாயமான முகமதுவை தேடிவந்தனர்.

இந்த நிலையில் கலபுரகி அருகே குர்கேதா என்ற பகுதியில் ஓடும் ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக மிதப்பதாக, ரோஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆற்றில் பிணமாக மிதந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் மாயமானதாக தேடப்பட்ட முகமது என்பதும், அவரை யாரோ கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றதும் தெரியவந்தது. இதனால் முகமதுவை கொலை செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முகமதுவுக்கும், அவரது தொழில் கூட்டாளிகளான பயாஸ், நிஜாம், வாஜித் ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்தது தெரியவந்தது.

இதனால் அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பணத்தகராறில் முகமதுவை கொன்று உடலை ஆற்றில் வீசியதை 3 பேரும் ஒப்புகொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேர் மீதும் ரோஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்