கோவிலுக்காக வளர்த்த தாடியை கேலி செய்ததால் கழுத்தை அறுத்து கொன்றேன் - கைதான நண்பர் வாக்குமூலம்
கோவிலுக்காக வளர்த்த தாடியை கேலி செய்ததால் கழுத்தை அறுத்து கொன்றேன் என்று கைது செய்யப்பட்ட அவரது நண்பர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரோடு,
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). இவரும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (38) என்பவரும் நண்பர்கள். 2 பேரும் ஈரோட்டில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். வேலை முடிந்ததும் இவர்கள் 2 பேரும் இரவில் மணிக்கூண்டு பகுதியில் ரோட்டோரம் தங்குவது வழக்கம்.
மேலும் சில நேரங்களில் இவர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவார்கள். அதைப்போல் சம்பவத்தன்று நள்ளிரவில் 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் பெருமாளின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் பெருமாள் மயக்கம் அடைந்து கீழே விழுந்து சிறிது நேரத்தில் இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாளை கொலை செய்ததாக லட்சுமணனை கைது செய்தனர். போலீசாரிடம் கொலைக்கான காரணம் குறித்து லட்சுமணன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நானும், பெருமாளும் நண்பர்கள். ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தோம். கடந்த 28-ந்தேதி மணிக்கூண்டு விநாயகர் கோவில் அருகே 2 பேரும் மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது பெருமாள் நான் கோவிலுக்காக வளர்த்திருந்த தாடியை பார்த்து கேலி செய்து என்னை அடித்து சாக்கடையில் தள்ளினார். இதில் ஆத்திரமடைந்த நான் பிளேடால் பெருமாளின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன். அதன் பின்னர் தான் அவர் இறந்தது எனக்கு தெரியவந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.