வேல்ராம்பட்டு ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணி மும்முரம் - லாரிகள் செல்வதால் சிதைந்துபோன சாலை
புதுவை வேல்ராம்பட்டு ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
புதுச்சேரி,
புதுவையில் உள்ள ஏரி, குளங்களில் விவசாயிகள் கட்டணம் செலுத்தி வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நகரப்பகுதியில் உள்ள வேல்ராம்பட்டு ஏரியில் இந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் வண்டல் மண் தோண்டி எடுக்கப்படுகிறது.
இதனால் ஏரியின் பல பகுதிகள் ஆழப்படுத்தப்பட்டு உள்ளன. அதேநேரத்தில் லாரிகள் அடிக்கடி சென்று வருவதால் ஏரிக்கரையை சுற்றியுள்ள சாலைகள் மிகவும் மோசமாகியுள்ளன. தார் சாலைகள் ஆங்காங்கே ஒரு அடி ஆழத்துக்கும் மேலாக புதைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளிக்கிறது. மற்ற வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் இப்போது உள்ளது.
நகரப்பகுதியில் இருப்போர் கொம்பாக்கம், வில்லியனூர் பகுதிக்கு செல்ல அந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது அது பயன்படுத்த முடியாத அளவுக்கு சிதைந்துபோய் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.