நெல்லை மாவட்டத்தில், வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் சாவு

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.

Update: 2020-10-30 21:30 GMT
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் புத்தன்தருவை அருகே உள்ள வெள்ளிவிளையை சேர்ந்தவர் இம்மானுவேல் ஜெயக்குமார் (வயது 46). இவர் சொந்தமாக மினிலாரி வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் திசையன்விளை உடன்குடி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இம்மானுவேல் ஜெயக்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் வடலிவிளையை சேர்ந்தவர்கள் பண்டாரம் மகன்கள் பெருமாள் (65), சோமசுந்தரம் (60). இருவரும் விவசாயிகள். இவர்கள் தெற்கு வள்ளியூர் அருகே சொந்தமாக தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். காருண்யபுரம் அருகே வந்த போது காருண்யா புரத்தைச் சேர்ந்த திரவியம் மகன் பொண்ணுதுரை (36) எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பெருமாள் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய தம்பி சோமசுந்தரம் பலத்த காயங்களுடன் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

வள்ளியூர் அருகே உள்ள கலந்தப்பனையை சேர்ந்தவர் ராஜகோபால் (44), நடுவக்குறிச்சி சண்முகபுரத்தை சேர்ந்தவர்கள் முத்துகுமார் (47), மகேஷ்குமார் (30). இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் திசையன்விளையில் இருந்து நவ்வலடி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மணியன்குடி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை டவுனை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (40). இவர் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மூன்றடைப்பில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மூன்றடைப்பு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சண்முகசுந்தரம் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கணேஷ் (20) என்பவரும் பலத்த காயமடைந்தார். அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்