இரட்டை இலை சின்ன வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு கொரோனா பாதிப்பு - ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி

இரட்டை இலை சின்ன வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Update: 2020-10-31 00:14 GMT
சென்னை,

இரட்டை இலை சின்னம் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் சுகாஷ் சந்திரசேகர். இவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது தாயார் சென்னை அடையாறில் வசிக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தாயாரை பார்ப்பதற்காக சுகாஷ் சந்திரசேகர் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் இடைக்கால ஜாமீன் பெற்று, கடந்த 2-ந் தேதி சென்னை வந்தார்.

அவரது தாயாரை சந்தித்தார். அவரோடு தங்கியிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் முடிவடைந்தது.

இதற்கிடையே கடந்த 12-ந் தேதியும், 20-ந் தேதியும், 27-ந் தேதியும் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் 3 முறையும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர் அடையாறில் உள்ள தனது தாயாரோடு தங்கியிருந்து தன்னையும் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரது இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் அவருக்கு உண்மையிலேயே கொரோனா தொற்று உள்ளதா? என்று கண்டறியும்படியும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு சென்னை போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டது.

கொரோனா தொற்று இருப்பதாக, அவர் தனியார் மருத்துவமனையில் போலியான மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டு இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரியவந்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், சென்னை போலீசார் நேற்று இரவு 8 மணி அளவில் சுகாஷ் சந்திரசேகரை, அவரது தாயார் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனை முடிவு உடனடியாக கிடைத்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்