திருத்தணி அருகே பிளாஸ்டிக் பை கழுத்தில் இறுக்கி சிறுவன் சாவு விளையாட்டு விபரீதமானதால் சோகம்

திருத்தணி அருகே முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடி விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-10-31 00:30 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 35). இவரது மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு தனுசிஸ்ரீ (6) என்ற மகளும், சுஜித் (5) என்ற மகனும் உள்ளனர். பூபாலன் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை பூபாலன் வேலைக்கு புறப்பட்டு சென்றார். குழந்தைகள் தனுஸ்ரீ, சுஜித் ஆகியோர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். தாய் சங்கீதா சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுஜித் தனது முகத்தை முழுவதும் பிளாஸ்டிக் பையால் மூடி விளையாடிக் கொண்டிருந்த போது, பிளாஸ்டிக் பை கழுத்தில் இறுக்கிக் கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதில் பிளாஸ்டிக் பையை சிறுவன் கழற்ற முடியாமல் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தான்.

இந்தநிலையில், சிறிது நேரத்தில் சமையல் வேலை முடிந்து சங்கீதா வந்து பார்த்த போது, அங்கு சிறுவன் சுஜித் முகத்தில் பிளாஸ்டிக் பையுடன் மயங்கி விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பதறியடித்து சிறுவனை தூக்கி கொண்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிறுவன் சுஜித்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மனவேதனை அடைந்த சங்கீதா மகனைப் பிரிந்த சோகத்தில் கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து சுஜித்தின் தந்தை பூபாலன் திருத்தணி போலீசில் தகவல் அளித்தார். தகவலறிந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வேலஞ்சேரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்