போடி அருகே, கட்டிட தொழிலாளி வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகை திருட்டு
போடி அருகே கட்டிட தொழிலாளி வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகையை மர்மநபர் திருடி சென்று விட்டார்.;
போடி,
போடியை அடுத்த சில்லமரத்துபட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கணவன், மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டனர். இந்தநிலையில் மதியம் 2 மணி அளவில் குழந்தைகள் சாப்பிட்டு விட்டு விளையாட சென்றனர்.
இதை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடி சென்று விட்டார்.இந்த நிலையில் மாலையில் வேலை முடிந்து கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும்.
இது குறித்து சிவக்குமார், போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் போலீஸ் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கும் பணி நடந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில்லமரத்துபட்டியில் நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்குள் புகுந்து நகை திருடு போனதிலும், இரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர்தானா? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.