போடி அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
போடி அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போடி,
தேனி மாவட்டம் போடியை அடுத்த சில்லமரத்துபட்டியில், தேவாரம் செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது போல நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களால் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இதனிடையே நேற்று காலை ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும், போடி தாலுகா போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனாட்சி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வங்கி அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த கண்காணிப்பு கேமரா துணியால் மூடப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியாமல் இருப்பதற்காக கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி உள்ளனர். பின்னர் வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம்.எந்திரத்தின் லாக்கரை திறந்து சோதனை நடத்தினார்கள். இதில் லாக்கரில் இருந்த ரூ.3½ லட்சம் கொள்ளை போகாமல் தப்பி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு, கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.