2 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கியத மாயமான ஒப்பந்ததாரர் கொன்று புதைப்பு - செஞ்சி அருகே உடல் தோண்டி எடுப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஒப்பந்ததாரர் கொன்று புதைக்கப்பட்டார். அவரது உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
செஞ்சி,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள நரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மூங்கிலான். இவருடைய மகன்கள் செந்தில்குமார்(வயது 38), ராஜ்குமார் (35). செந்தில்குமார் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூங்கிலான் தனது சொத்துக்களை 2 மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தார். அதில் ராஜ்குமாருக்கு அதிகமாக பங்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் பத்மினி மாயமான செந்தில்குமாரை கண்டுபிடித்து தரக்கோரி மணிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால் பத்மினி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்துபோலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் இவ்வழக்கில் துப்பு துலங்கவில்லை.
இந்த நிலையில் போலீசார் செந்தில்குமாரின் கார் டிரைவரான ராஜேஷ்கண்ணன் என்பவரை கடந்த ஒருவாரத்திற்கு முன்பு பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேஷ்கண்ணன் மற்றும் செந்தில்குமாரின் மாமனார் அருண், அரிகிருஷ்ணன், காசிநாதன் ஆகிய 4 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை கொலை செய்து, செஞ்சி அருகே உள்ள பசுமலைதாங்கல் கிராமத்தில் உள்ள அருண் நிலத்தில் புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜேஷ்கண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள பசுமலைதாங்கல் கிராமத்திற்கு வந்து அருண், அரிகிருஷ்ணன், காசிநாதன் ஆகியோரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த செந்தில்குமாரின் உடல் செஞ்சி தாசில்தார் ராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்ட தடயவியல் உதவி இயக்குனர் சண்முகம் குழுவினரால் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த கொலைக்கான காரணம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும்.