உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் உடல் வீசப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்: விஷம் கொடுத்து பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்த கள்ளக்காதலன் கைது - பரபரப்பு தகவல்கள்

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண் இறந்த வழக்கில், திடீர் திருப்பமாக அவரை அவரது கள்ளக்காதலன் விஷம் கொடுத்து கொன்றது அம்பலமானது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-10-30 13:30 GMT
உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே சிறுபாக்கத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி லதா (வயது 30).இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம் முன்பு லதா வாயில் நுரை தள்ளியபடி கீழே கிடந்தார். இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், லதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லதாவுக்கு யாரேனும் விஷம் கொடுத்து கொலை செய்து பிணத்தை மருத்துவமனை வளாகத்தில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வந்தனர். மேலும் லதா சாவு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஏழுமலை (45) என்பவரை பிடித்து உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.

இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர் லதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ஏழுமலை போலீசாருக்கு அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவலை கூறினார். அதன் விவரம் வருமாறு:-

எனக்கும், லதாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். எங்களது கள்ளக்காதல் விவகாரம் லதாவின் கணவர் வேல்முருகனுக்கு தெரிந்தது. அவர் லதாவை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் லதா எனது வீட்டுக்கு வந்து, தனது கணவரை பிரிந்து வந்து விட்டதாகவும், அவருடன் குடும்பம் நடத்த வருமாறும் என்னை அழைத்தார். இதனால் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் லதாவிடம் இருந்து தப்பிக்க அவரை கொலை செய்ய முடிவு செய்து திட்டம் தீட்டினேன்.

அதன்படி நேற்று முன்தினம் அவரை மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு அழைத்து சென்றேன். பின்னர் அங்குள்ள மறைவான இடத்தில் நாங்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது லதாவிடம் நமக்கு 2 பேருக்கும் தனித்தனியாக குடும்பம் உள்ளது. எனவே நாம் ஒன்றாக இணைந்து குடும்பம் நடத்த முடியாது. எனவே நாம் 2 பேரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினேன். அதற்கு அவள் சம்மதம் தெரிவித்தாள்.

இதையடுத்து விஷத்தை வாங்கி வந்து, அவளிடம் கொடுத்து, முதலில் நீ விஷத்தை குடி, பின்னர் நான் குடிக்கிறேன் என்று கூறினேன். இதை நம்பிய அவள் விஷத்தை வாங்கி குடித்தாள். ஆனால் நான் விஷத்தை குடிப்பது போல் நாடகம் ஆடி அவளை ஏமாற்றினேன். இதற் கிடையில் விஷம் குடித்த அவள் மயங்கிய நிலையில் இருந்தார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், நான் அவளை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று மருத்துவமனை வளாகம் முன்பு போட்டு விட்டு சென்று விட்டேன். ஆனால் அவள் இறந்து விட்டாள். இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார். கைதான ஏழுமலைக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்காகும்.

மேலும் செய்திகள்