பரமத்திவேலூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: மனைவியை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கணவன் - பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
பரமத்திவேலூர் அருகே மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் கணவர் வெட்டினார். இதை பார்த்த பொதுமக்கள் திரண்டு வந்ததால் அவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் ஆதவன் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 42). மீனவ தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (38). இவர்களுக்கு தீபிகா (18) என்ற மகளும், திலீப் (15) என்ற ஒரு மகனும் உள்ளனர். தீபிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் குமாருக்கும், அவரது மனைவி தனலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் குமார் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி தனலட்சுமி போனில் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது தனலட்சுமிக்கும், குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த குமார் அருகில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி தனலட்சுயின் இடது கையை வெட்டியுள்ளார். ஒரு கையில் வெட்டை வாங்கிக்கொண்டு அங்கிருந்து உயிருக்கு பயந்து தனலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறி பொத்தனூர் மெயின் ரோட்டிற்கு ஓடினார். ஆனால் குமாரும் தனது மனைவியை பின்னால் துரத்தி சென்று ஓட, ஓட விரட்டி மனைவி தனலட்சுமியின் வலது கையையும் வெட்டியுள்ளார். இதை பொதுமக்கள் பார்த்தனர். உடனே அவர்கள் திரண்டு வந்தனர். அதற்குள் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த தனலட்சுமியை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொறுப்பு) வந்தார். குமார் தனது மனைவியை வெட்டி விட்டு கீழே போட்டு சென்ற அரிவாளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் நிறைந்த பொத்தனூர்- ஜேடர்பாளையம் சாலையில் பட்டப்பகலில் மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.