பத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
பத்மநாபபுரம் அரண்மனை வருகிற 3-ந்தேதி திறக்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. கேரள அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் இந்த அரண்மனையில் கேரள கலைநயத்துடன் மரக்கட்டைகளை கொண்டு கட்டப்பட்டது.
18-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரான அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது. 186 ஏக்கர் பரப்பளவு உள்ள கோட்டையில் 6½ ஏக்கரில் அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் உள்ளே மர வேலைப்பாடுகளுடன் பல அரிய சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளன. இவற்றை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
மீண்டும் திறப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி முதல் பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படுகிறது.
இதையடுத்து அரண்மனையை காண சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
இதுகுறித்து அரண்மனை பொறுப்பு அதிகாரி அஜித்குமார் கூறுகையில், நாள்தோறும் அரண்மனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பின்னர் அரண்மனை நுழைவாயில் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மேலும், 10 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கும், 60 வயது மேலான முதியவர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா தொற்று பரவல் தடுக்கும் விதத்தில் அரண்மனையை சுற்றி பார்க்க செல்லும் குறுகிய வழிகள் அடைக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
வியாபாரிகள் மகிழ்ச்சி
அரண்மனை திறப்பது குறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், தமிழக அரசு கொரோனா தளர்வு அறிவித்து கடைகள் திறக்க அனுமதி அளித்தது. ஆனால், சுற்றுலா தலங்களை சார்ந்த கடை வியாபாரிகளால் கடைகளை திறக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். அரண்மனை பகுதிகளில் கடை நடத்தும் வியாபாரிகள் முழுமையாக சுற்றுலா பயணிகளை சார்ந்துதான் உள்ளனர். 8 மாதங்களாக கடைகள் திறக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானோம். தற்போது அரண்மனை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.