டோம்பிவிலியில் 2 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது 18 குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

டோம்பிவிலியில் 2 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு வசித்து வந்த 18 குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2020-10-29 22:30 GMT
தானே,

தானே அருகே டோம்பிவிலி கோபர் பகுதியில் 2 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் சுமார் 18 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் கட்டிடத்தின் தூண்களில் சத்தம் கேட்டது. இதனை அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிலர் உணர்ந்தனர்.

எனவே அதிகாலை நேரத்தில் தூக்கத்தில் இருந்த மற்றவர்களை அவர்கள் உஷார்படுத்தினர். இதனால் குடியிருப்புவாசிகள் உடனடியாக தங்கள் வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். இதன்பின்னர் அனைவரும் வெளியே வந்த சில நிமிடங்களில் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். கட்டிடத்தில் அனைவரும் பத்திரமாக வெளியேறியதால் யாரும் காயமடையவில்லை என்பது தெரியவந்தது. இது பற்றி அறிந்த கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு வாசிகளை தங்கும் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் கட்டிட உரிமையாளர் அவர் களுக்கு வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி வார்டு அதிகாரி பரத்பவார் கூறுகையில், கட்டிடம் சேதமடைந்து இருந்ததால் குடியிருப்பு வாசிகளை காலி செய்யுமாறு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்