விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து - வங்கி முன்பு ஊராட்சி தலைவர் தீக்குளிக்க முயற்சி
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து வங்கி முன்பு ஊராட்சி தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி,
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் 98 பேர் பெரிய கொட்டகுடி ஊராட்சி மன்ற தலைவர் தனபால் தலைமையில் சாக்கோட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதுவயல் கிளைக்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அதில் தீர்வு ஏதும் ஏற்படாததால் பெரியகொட்டகுடி ஊராட்சி தலைவர் தனபால் அதிகாரிகளின் அலட்சிய போக்கினை கண்டித்து திடீரென தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சாக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சீனிராஜ், சேகர் ஆகியோர் உடனடியாக தனபாலை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெரியகொட்டகுடி ஊராட்சி தலைவர் தனபால் கூறுகையில், கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை மற்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் பெரிய கொட்டகுடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட 98 விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. வங்கி அதிகாரிகள் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளை கேளுங்கள் என்று கூறுகின்றனர். காப்பீட்டு நிறுவன அதிகாரிகளோ, வங்கி அதிகாரிகளிடம் கேட்குமாறு திருப்பி அனுப்புகின்றனர். அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த பதில் கூறாமல் விவசாயிகளை தொடர்ந்து அலைக்கழித்து வந்தனர்.
இதுகுறித்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டபின் காப்பீட்டு தொகையில் 3-ல் ஒரு பகுதி மட்டும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மீதித்தொகை குறித்து அதிகாரிகள் எப்பதிலும் கூறவில்லை. இதனால் சாக்கோட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் சென்று முறையிட்டோம். அங்கு நடந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு காண வழி ஏற்படவில்லை. இந்தபகுதி விவசாயிகளின் அவல நிலையை போக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அதன்பின் உயர் அதிகாரிகள் தலையிட்டு இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என உறுதிஅளித்தனர். அதன்பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.