அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

வேலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;

Update: 2020-10-29 11:00 GMT
வேலூர்,

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டது. இதற்கு அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு சமூக அமைப்பினரும் இந்த செயலை கண்டித்து வருகிறார்கள்.

சிலை அவமதிப்பு காரணமாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூகத்தினர் இடையே மோதல் மற்றும் சாலை மறியல், போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பேத்கர், பெரியார் சிலைகளை கண்காணிக்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகேயுள்ள பெரியார் சிலை, காட்பாடி பகுதியில் 3, குடியாத்தம் பகுதியில் 2 என்று மொத்தம் 6 சிலைகளுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள 78 அம்பேத்கர் சிலைகளுக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பகல் நேரத்தில் ரோந்துப்பணி மற்றும் இரவு நேரத்தில் சிலைகளை பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகளை அவமதிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்