கடத்தூர் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி - ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனை

கடத்தூர் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2020-10-29 09:15 GMT
கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர், கம்பைநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து தர்மபுரி, கடத்தூர், அரூர் ஆகிய இடங்களில் உள்ள மார்க்கெட் மற்றும் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தக்காளியை வியாபாரிகள் வாங்கி சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கடத்தூர் சந்தை மற்றும் மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களாக 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட், சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150 விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையாக ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்படுகிறது.

விலை வீழ்ச்சியால் தக்காளியை வாங்க வியாபாரிகள் முன் வராததால் விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்கின்றனர். மேலும் பல விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு பருவமழை நல்ல முறையில் பெய்துள்ளதால் தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. கடத்தூரில் உள்ள மார்க்கெட் மற்றும் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்று கவலையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்