ஜிப்மர் மருத்துவ மனையில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை மீண்டும் தொடக்கம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி

ஜிப்மரில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புறநோயாளிகளுக்கான சிகிச்சை மீண்டும் தொடங்கியது. டாக்டர் களால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டவர்கள் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2020-10-29 00:14 GMT
புதுச்சேரி,

புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் கொரோனா பரவல் காரணமாக வெளிப்புற சிகிச்சை சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று (புதன்கிழமை) முதல் மீண்டும் வெளிப்புற சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அதற்கு தொலைபேசி மூலம் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்காக ஒவ்வொரு துறை வாரியாக தொலைபேசி எண்களின் விவரம் ஜிப்மர் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது. இந்த மருத்துவ ஆலோசனையின்போது நேரில் மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் டாக்டர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைப்பர். அவர்களுக்கு மட்டுமே டாக்டர்கள் நேரில் சிகிச்சை அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஜிப்மரில் நேற்று புறநோயாளிகளுக்கான சிகிச்சை மீண்டும் தொடங்கியது. இது பற்றிய தகவல் அறிந்து தமிழக பகுதியான திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வானூர் ஆகிய ஊர்களில் இருந்தும், புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்தனர்.

அவர்களிடம், மருத்துவமனை காவலாளிகள் டாக்டர்கள் அனுப்பிய குறுஞ்செய்தி கேட்டனர். அது இல்லாதவர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர். குறுஞ்செய்தி வைத்து இருந்தவர்களை மட்டும் மருத்துவமனைக்குள் அனுமதித்தனர். அப்போது அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனைக்கு வருவோர் முகக்கவசம் அணிவதுடன் ஒருவர் சென்றபின் மற்றவர் வரவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.

குறுஞ்செய்தி இல்லாதவர்கள் மருத்துவமனை முன் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் தங்களின் நோய்களின் விவரத்தை டாக்டர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்து அதற்கான சிகிச்சை முறையை கேட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மேலும் செய்திகள்