சமஸ்கிருத பள்ளி முதல்வர் கொலை வழக்கில் பிரபல பின்னணி பாடகி அனன்யா பட்டின் தந்தை உள்பட 5 பேர் கைது - திடுக்கிடும் தகவல்கள்

மைசூருவில் நடந்த சமஸ்கிருத பள்ளி முதல்வர் கொலை வழக்கில் பிரபல பின்னணி பாடகி அனன்யா பட்டின் தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2020-10-28 22:16 GMT
மைசூரு,

மைசூரு டவுன் நிவேதிதா நகரில் வசித்து வந்தவர் பரசிவமூர்த்தி. இவர் சமஸ்கிருத பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மேலும் இவர் மைசூரு டவுன் பகுதியில் சொந்தமாக சமஸ்கிருத இசைப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். அந்த பள்ளிக்கு அவரே முதல்வராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம்(செப்டம்பர்) 20-ந் தேதி பரசிவமூர்த்தி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பரசிவமூர்த்தியை சரமாரியாக தாக்கியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் மைசூரு டவுன் சரஸ்வதிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரசிவமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க மைசூரு மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரகாஷ் கவுடா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது பரசிவமூர்த்தி சொந்தமாக நடத்தி வந்த சமஸ்கிருத பள்ளியில் ஏராளமானோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.

அதில் சில ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு பரசிவமூர்த்தி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சம்பளமும் சரியாக கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக அவரது நண்பரும், முன்னாள் சக ஊழியருமான விஸ்வநாத் பட்(வயது 52) என்பவருக்கு தெரியவந்தது. விஸ்வநாத் பட்டும் மைசூரு என்.ஆர்.மொகல்லா பகுதியில் சொந்தமாக சமஸ்கிருத பள்ளி வைத்து நடத்தி வருவதாகவும், அந்த பள்ளிக்கு அவர் தலைமை ஆசிரியராக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே விஸ்வநாத் பட் இதுபற்றி பரசிவமூர்த்தியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறும் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த காரணங்களால் விஸ்வநாத் பட், பரசிவமூர்த்தியை கொலை செய்திட முடிவு செய்தார். அதற்காக அவர் மடிவாளசுவாமி சமஸ்கிருத பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சித்தராஜு என்பவரை அணுகினார்.

அவர் மூலம் மைசூரு டவுன் புகதஹள்ளி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி நிரஞ்சன், பரசிவா, ஐ.டி.எப்.சி. வங்கி அதிகாரி நாகேஷ் உள்ளிட்டோர் கூலிப்படைகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு விஸ்வநாத் பட் ரூ.7 லட்சமும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து கூலிப்படையினர் சம்பவத்தன்று பரசிவமூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவரை படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஸ்வநாத் பட், நாகேஷ், நிரஞ்சன், சித்தராஜு, பரசிவா ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.55 ஆயிரம் ரொக்கம், ஒரு கார், 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சரக்கு ஆட்டோ, 8 செல்போன்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் கைதாகி உள்ள விஸ்வநாத் பட் கர்நாடக திரை உலக பிரபல பின்னணி பாடகி அனன்யா பட்டின் தந்தை ஆவார். கடந்த 2 வருடங்களாக அனன்யா பட், தனது தந்தையை பிரிந்து தன்னுடைய தாயுடன் பெங்களூருவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்