பல்லடம் அருகே, குளிர்சாதன பெட்டி வெடித்து வீடு தீப்பிடித்தது - பொருட்கள் எரிந்து நாசம்

பல்லடம் அருகே குளிர்சாதன பெட்டி வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

Update: 2020-10-28 15:00 GMT
பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் சூர்யா கார்டனை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது வீட்டில் குளிர்சாதன பெட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சுப்பிரமணி வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் 3 பேரும் விளையாட வெளியில் சென்று விட்டனர். ஜெயாவும், கடைக்கு சென்று இருந்தார்.

சிறிது நேரத்தில் இவர்களுடைய வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் ஓடுகள் சேதம் அடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயா ஓடோடிவந்து, அருகில் இருந்தவர்களுடன் துணையுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.

ஆனாலும் வீட்டில் இருந்த துணிகள், கட்டில் பீரோ மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்ததால் தீப்பிடித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்