தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
கணவரை சேர்த்து வைக்கக்கோரி, தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
தேனி,
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு, தென்னிந்திய பார்வர்டுபிளாக் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக, போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி பாண்டிச்செல்வி தனது 3 வயது மகள், 1½ வயது மகன் ஆகியோருடன் அங்கு வந்தார். அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை பார்த்ததும் சந்தேகம் அடைந்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது, அந்த பையில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது. விசாரணையில், அவர் தனது கணவர் தன்னோடு சேர்ந்து வாழ மறுப்பதால் குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், பாண்டிச்செல்வியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், “எனது கணவர் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கிறார். குழந்தையை கவனித்துக் கொள்வது இல்லை. என்னோடு சேர்ந்து வாழ மறுக்கிறார். கணவரை என்னோடு சேர்ந்து வாழ விடாமல் அவரது குடும்பத்தினர் தடுக்கின்றனர். போலீசில் புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை“ என்றார்.
உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபனை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். அந்த பெண்ணின் கணவரை அழைத்து விசாரித்து, அவரோடு சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார். பின்னர் அவர், பாண்டிச்செல்வி மற்றும் குழந்தைகள் பசியோடு இருப்பதை அறிந்து அவர்களின் வழிச்செலவுக்கு பணம் கொடுத்தார்.
மேலும், அங்கிருந்த போலீசார் சிலரை அழைத்து அந்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி, போலீசார் அங்கிருந்த ஒரு ஓட்டலில் பாண்டிச்செல்விக்கும், குழந்தைகளுக்கும் உணவு வாங்கி கொடுத்தனர். பின்னர் ஒரு ஆட்டோவில் அவர்களை போடி துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.