திண்டுக்கல் அருகே, குடகனாற்றில் தண்ணீர் திறக்கக்கோரி 30 கிராமமக்கள் மறியல் - போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்ததால் பரபரப்பு
திண்டுக்கல் அருகே குடகனாற்றில் தண்ணீர் திறக்கக்கோரி 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர் களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குடகனாறு, கூழையாறு ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இந்த ஆறுகளின் தண்ணீர், காமராஜர் அணையில் தேக்கப்படுகிறது. மேலும் குடகனாறு, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் ஆகியவற்றிலும் திருப்பி விடப்பட்டது. காமராஜர் அணை நிரம்பினால், அதில் இருந்து குடகனாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த நிலையில் ஆத்தூர் அணையை அடுத்த கன்னிமார்கோவில் அருகே உள்ள ராஜவாய்க்காலிலும், காமராஜர் அணைக்கு தண்ணீர் வரும் இடத்திலும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இதனால் காமராஜர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. இதேபோல் குடகனாற்றிலும் தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டது.
இந்த குடகனாறு தண்ணீர், ஆத்தூரில் தொடங்கி பல்வேறு கிராமங்கள் வழியாக வேடசந்தூர் அழகாபுரி அணையில் சேரும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால், குடகனாறு முற்றிலும் வறண்டது. இதனால் குடகனாறு வழியோர கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த ஆண்டு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து குடகனாற்றில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று வலியுறுத்தி குடகனாறு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால் 15 நாட்கள் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது போதுமானதாக இல்லை என்றும், கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் குடகனாறு நீர்ப்பாசன விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால், குடகனாற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்தநிலையில் அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், ஆலமரத்துப்பட்டி, குட்டத்துப்பட்டி, வீரக்கல், பித்தளைபட்டி, அணைப்பட்டி, பாலம்ராஜக்காபட்டி உள்பட குடகனாறு பாசனத்துக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று திரண்டனர். பின்னர் திண்டுக்கல்-தேனி சாலையில் உள்ள பித்தளைபட்டி பிரிவை நோக்கி கையில் கருப்புக்கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். குடகனாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும், ராஜவாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை இடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதனால் திண்டுக்கல்-தேனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங் கள் வேறுபாதையில் திருப்பி விடப்பட்டன.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்லத் தொடங்கினர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதற்காக சாலையில் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். ஆனால், போலீசாரை மீறி பொதுமக்கள் முன்னேறி சென்றனர். ஒருசிலர் சாலையை விட்டு இறங்கி காட்டுப்பகுதி வழியாக சென்றனர். இதற்கிடையே திண்டுக்கல்-தேனி சாலையும், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையும் சந்திக்கும் இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அதற்குள் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டனர். உடனே அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள பாலத்தின் மீது நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு மற்றும் வல்லுனர் குழுவை சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வல்லுனர் குழு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து, நீர்பங்கீடு குறித்து முடிவை அறிவிக்கும்வரை போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போலீசார் லத்தியை சுழற்றியபடி பொதுமக்களை கலைத்தனர். பதற்றம் அடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஒரு சிலர், காட்டுப்பகுதி வழியாகவும் முட்புதர் வழியாக வும் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் சிரமப்பட்டனர். மேலும் சாலையில் திமு திமுவென மக்கள் ஓடுவதை பார்த்து சிறுவர்கள் அழுததால், பெண்கள் செய்வதறியாது திகைத்தனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க தப்பியோடிய போது ஒரு மூதாட்டி கீழே தடுமாறி விழுந்ததில் மயக்கம் அடைந்தார்.
இதற்கிடையே கையில் சிக்கியவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்றும், இழுத்து சென்றும் போலீசார் வேனில் ஏற்றினர். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கிராம மக்களை அழைத்து வர பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் காலை 9.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 12.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதன்பின்னரே அங்கு வாகன போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.