வேலூரில், சிறுபாலம் அமைக்கக்கோரி கால்வாய் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் - பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்
வேலூரில் சிறுபாலம் அமைத்து தரக்கோரி கால்வாய் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
வேலூர்,
வேலூர் முள்ளிப்பாளையம் பெரியார் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் கொணவட்டம்-வேலூர் மெயின் சாலைக்கு செல்வதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு அவசரமாக செல்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். மழைக்காலங்களில் கழிவுநீர் எங்கள் பகுதியில் புகுந்து சாலையில் செல்ல முடிவதில்லை. எனவே இந்த பகுதியில் இருந்து அவுலியார்தர்கா தெருவுக்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிறுபாலம் அமைத்தால் 500 மீட்டர் தூரத்தில் கொணவட்டம்-வேலூர் மெயின் சாலையை அடைந்துவிட முடியும். எனவே பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பல மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் உள்பட பலரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை பாலம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் அதிருப்தி அடைந்த பெரியார் நகர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று காலை 9 மணி அளவில் பெரியார் நகரில் நடைபெற்று வந்த கால்வாய் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் அந்த பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலம் அமைத்து தந்தால்தான் கால்வாய் பணியை தொடர அனுமதிப்போம் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாசில்தார் ரமேஷ், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுபாலம் அமைப்பது தொடர்பாக மதிப்பீடு செய்து விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.