டெண்டருக்கான விண்ணப்பம் வழங்காததை கண்டித்து குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாலைப்பணிக்கான டெண்டர் விண்ணப்பம் வழங்காததை கண்டித்து குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-28 11:15 GMT
குளித்தலை,

குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்களான சந்திரசேகர், முருகேசன், சாந்தாஷீலா விஜயகுமார், சங்கீதா ஆகிய 4 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது கூறியதாவது:-

குளித்தலை ஊராட்சி ஒன்றியம், ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்டதும், 3-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பகுதிக்கு உட்பட்ட 2 பகுதிகளில் ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கான டெண்டர் கோர விண்ணப்பம் வழங்க நேற்று கடைசி நாளாகும். விண்ணப்பப்படிவம் கேட்ட ஒப்பந்ததாரர் ஒருவருக்கு விண்ணப்பப் படிவம் கொடுக்காமல் அலைக்கழித்து அலுவலகத்திலிருந்து சென்று விட்டனர். விண்ணப்பப்படிவம் கொடுக்காமல் அலைக்கழித்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், மேலாளர் ரவிக்குமார் ஆகியோரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேன்மொழி தியாகராஜனும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை நகர தி.மு.க. செயலாளர் மாணிக்கம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகளும் அங்கு வந்தனர். அவர்களிடம் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய தீர்வு காணப்படவில்லை. அதனைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள சாலை பணிக்கான டெண்டரை தள்ளிவைக்க வேண்டும். இல்லையெனில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தலைமையில் நாளை (வியாழக்கிழமை) ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க.வினர் தெரிவித்து அங்கிருந்து எழுந்து சென்றனர்.

மேலும் செய்திகள்