மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி - மேலும் 146 பேருக்கு தொற்று உறுதி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர். மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவால் 165 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 89 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 7 பேர், சேலம் ஒன்றியத்தில் 4 பேர், வீரபாண்டியில் 3 பேர், எடப்பாடி, ஓமலூர், கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், சங்ககிரி, மேச்சேரி, காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம், வாழப்பாடி, கெங்கவல்லி, மேட்டூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 11 பேர், கோவையில் இருந்து சேலம் வந்த 10 பேர், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 7 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 191 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சேலத்தை சேர்ந்த 80 வயதுடைய முதியவர், 60 வயதுடைய மூதாட்டி ஆகியோரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் 64 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் பலியானார். மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர்.