திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்; உருவபொம்மை எரிப்பு
திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க.வினருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று பா.ஜ.க. திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட மகளிரணி சார்பில் இந்து பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் யமுனா விஜயபாஸ்கரன், ஷோபா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அப்போது திரளான பெண்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்தும் அவரை போலீசார் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது அங்கு திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திருமாவளவன் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏந்தியவாறு பேரணியாக வந்தனர். இதை பார்த்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் தலைமையில் திரளான போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 40 பேரை தடுத்து நிறுத்தி திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
உருவபொம்மை எரிப்பு
பா.ஜ.க மகளிரணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க ஓ.பி.சி. மாநில தலைவர் லோகநாதன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் சண்முகம், பன்னீர்செல்வம் என 100-க்கும் மேற்பட்டவர்கள் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் திடீரென திருமாவளவனின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து உருவபொம்மை மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
110 பேர் கைது
இதை தொடர்ந்து போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்து அந்த உருவ பொம்மையை எடுத்து சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பெண்கள் 30 பேர் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீ சார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் நேற்று திருவள்ளூரில் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.