காட்பாடியில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபருக்கு அடி-உதை
காட்பாடியில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
வேலூரை அடுத்த காட்பாடி தாராபடவேட்டில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் காலை, இரவு வேளைகளில் பூஜை நடைபெறும். நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு பூஜை முடிந்தபிறகு கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவில் காவலாளி உடனடியாக அருகே உள்ள வீட்டில் வசிக்கும் பொதுமக்களிடம் இதுகுறித்து தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்கு வாலிபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து கொண்டிருப்பது தெரியவந்தது. பொதுமக்களை கண்டவுடன் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் பொதுமக்கள் விரட்டி சென்று வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
வாலிபருக்கு அடி-உதை
பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்து அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்தனர். இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவில் காவலாளி மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். பொதுமக்கள் அந்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் வாலாஜாவை சேர்ந்த வீரன் (வயது 30) என்பதும், கோவில் பின்பக்க சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் வீரன் காயம் அடைந்ததால் அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.