பழனி முருகன் கோவிலுக்கு ரூ.4½ லட்சத்தில் மின்விளக்குடன் கூடிய வேல் எடப்பாடி பக்தர் வழங்கினார்

பழனி முருகன் கோவிலுக்கு எடப்பாடி பக்தர் வழங்கிய ரூ.4½ லட்சம் மதிப்பிலான மின் விளக்குடன் கூடிய வேல் பொருத்தப்பட்டுள்ளது.

Update: 2020-10-27 03:20 GMT
பழனி, 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதில் ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு பயன்படும் வகையில் லாரி, வேன் உள்ளிட்டவற்றை வாங்கி நேர்த்திக்கடனாக வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் தற்போது கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில் மண்டபங்கள், கோபுரங்களில் உள்ள சிலைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் மலைக்கோவில் ராஜகோபுரம் அருகில் வைக்கப்பட்டிருந்த மின்விளக்குடன் கூடிய வேல் கடந்த ஜூன் மாதம் அகற்றப்பட்டது.

மின் விளக்குடன் வேல்

அதற்கு பதிலாக, புதிதாக மின்விளக்குடன் கூடிய வேல் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே மலைக்கோவிலில் வேல் அகற்றப்பட்டது குறித்து தகவலறிந்த சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெரியநாச்சியூரை சேர்ந்த வையாபுரி என்ற பக்தர் ரூ.4½ லட்சம் மதிப்பிலான மின்விளக்குடன் கூடிய வேலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அந்த வேல், தற்போது மலைக்கோவிலின் வடக்கு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், மலைக்கோவிலில் ஏற்கனவே இருந்த வேல் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது. எனவே தான் அந்த வேலை அகற்றிவிட்டு பக்தர் காணிக்கையாக கொடுத்த வேலை பொருத்தியுள்ளோம். ஏற்கனவே இருந்த வேலை போல், பழனி நகரின் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் பக்தர்களுக்கு தெரியும்படி இந்த வேல் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்