ஆயுதபூஜையன்று நொய்யல் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆயுத பூஜையன்று மங்கலம் பகுதியில் நொய்யல் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.

Update: 2020-10-27 00:36 GMT
மங்கலம், 

ஊட்டி- பந்தலூர் பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரின் மகன் யோகரத்தினம் (வயது 26). இவர் மங்கலம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருடன் ஊட்டி பகுதியை சேர்ந்த வினோத்ராஜ் (29), சுபாஷ் (20), மாணிக்கவேல் (33), ராஜா (35) ஆகியோர் மங்கலம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் ஆயுதபூஜை தின விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு யோகரத்தினம் உள்பட 5 பேரும் மதுபானங்களை வாங்கிவந்துள்ளனர். பின்னர் மங்கலம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் அமர்ந்து மது குடித்தனர். அதனை தொடர்ந்து 5 பேரும் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைக்கு சென்றனர்.

தண்ணீரில் மூழ்கி பலி

அங்கு யோகரத்தினம் மட்டும் தடுப்பணையில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். மற்ற 4 பேரும் நொய்யல் ஆற்றின் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் யோகரத்தினம் மூழ்கினார். உடனே “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் ” என அபயக்குரலை எழுப்பினார். அப்போது 4 பேரும், அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் யோகரத்தினத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை.

இது குறித்து மங்கலம் போலீசாருக்கும், பல்லடம் தீயணைப்பு- மீட்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு-மீட்புக்குழுவினர் வந்து யோக ரத்தினத்தை தேடினர். நீண்டநேர தேடலுக்கு பிறகு இறந்த நிலையில் யோகரத்தினத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்