தூத்துக்குடியில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட சுகாதார வளாகம் - மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு

தூத்துக்குடியில் காலியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களால் சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது.;

Update: 2020-10-26 22:30 GMT
தூத்துக்குடி,

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துகளில் பல ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான பல திட்டங்களையும் அரசு தீட்டி வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து அதற்கு ஏற்ப மறுசுழற்சி மேற்கொள்ளப்படுகிறது. மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் (கழிவறை) கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சேமிக்கப்படும் குப்பைகளில் உள்ள காய்கறி கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அலுவலர்களுக்கு இலவசமாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்திய பிறகு காலி பாட்டில்கள் அனைத்தும் மாநகராட்சி மூலம் சேகரித்து வைக்கப்பட்டன. அந்த காலிபாட்டில்கள் அனைத்தும் பெருமாள்புரம் திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

இங்கு சோதனை முயற்சியாக காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் மற்றும் குளியல் அறை கட்டும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. தொடர்ந்து திடக்கழிவு வளாகத்தின் உள்ளேயே செங்கலுக்கு பதிலாக காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு கழிவறை கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

காலி தண்ணீர் பாட்டில்களில் கடல் மண் அடைக்கப்பட்டு பாட்டில்களின் மூடி பசையால் ஒட்டி சீல் வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து செங்கலுக்கு பதிலாக மண் நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் வரிசையாக அடுக்கி வைத்து சிமெண்ட் கலவை மூலம் சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. சுமார் 1500 காலி பாட்டில் மூலம் இந்த சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பொதுவாக செங்கல்களை பயன்படுத்தி கழிவறை கட்டும் செலவை விட, காலி பாட்டிலால் கட்டுபோது செலவு குறைவாக உள்ளது. செங்கல் போன்று ஸ்திரத்தன்மையோடு இருப்பதற்காக பாட்டில் உள்ளே கடல் மண் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் உறுதித்தன்மை கிடைக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெறும்பட்சத்தில் மாநகராட்சியின் பல இடங்களிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவுபாட்டில்கள் மூலம் கழிவறைகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது“ என்றனர்.

மேலும் செய்திகள்