ஆயுத பூஜையையொட்டி விற்பனை களை கட்டியது திருச்சியில் பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு
திருச்சியில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள், பழங்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்கள் விலை 3 மடங்கு உயர்ந்து காணப்பட்டது.
திருச்சி,
ஆயுதபூஜை விழா நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜையையொட்டி வியாபார நிறுவனங்கள், மற்றும் தொழில் கூடங்களில் எந்திரங்கள், உபகரணங்களுக்கு பூஜைகள் நடத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு திருச்சியில் பூஜை பொருட்களின் விற்பனை நேற்று களை கட்டியது.
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி, பொரி, கடலை மற்றும் பூஜை பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகின. பூஜை பொருட்களை வாங்குவதற்காக காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள பெரியகடைவீதி, நெல்பேட்டை, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு
ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டுக்கு பூக்கள், மாலைகள் வாங்குவதற்காக பலர் திரண்டு வந்தனர். வழக்கத்தைவிட பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் சாத்தாரவீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.400-க்கும், முல்லை ரூ.450-க்கும், ஜாதிப்பூ ரூ.450-க்கும், பெங்களூரு ரோஜா பூ ரூ.300-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும், சம்மங்கி ரூ.250-க்கும் விற்பனையானது.
இதேபோல் பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் பூஜை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு முதல் வியாபாரிகள் அதிக அளவில் திரண்டிருந்தனர். இதனால் பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மினி லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.