சிவகங்கை மாவட்டத்துக்கு பெரியாற்று நீரில் உரிய பங்கை பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் பாஸ்கரன் தகவல்
பெரியாற்று தண்ணீரில் சிவகங்கை மாவட்டத்திற்குரிய பங்கை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாற்று கால்வாய் தண்ணீர் வழங்குவது தொடர்பாக விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு தண்ணீர் 5 பிரதான கால்வாய்கள் மூலம் பெறப்படுகிறது. 129 கண்மாய்கள் வழியாக விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் கடந்த 30 வருடங்களாக பெரியாறு தண்ணீரில் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய பங்கீடு முழுமையாக கிடைத்தில்லை. இதனால் ஒரு போக சாகுபடி கூட செய்ய முடியாத நிலை உள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு முல்லைப் பெரியாறு பாசனத்திற்கென தனி டிவிசனை அமைத்தால் மட்டுமே நமது மாவட்டத்திற்கான முழு கொள்ளளவு தண்ணீரை பெற முடியும். இந்த ஆண்டு முழு கொள்ளளவு தண்ணீர் பெரியாற்றில் இருப்பதால் நமது மாட்டத்திற்கு என முழு அளவு பங்கையும் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-
தற்போதுள்ள கால சூழ்நிலைக்கேற்ப விவசாய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பங்கீட்டு முறைப்படி சிவகங்கை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு அளவு தண்ணீரை 5 கால்வாய்களுக்கும் முழுமையாக பெற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு உரிய நாட்களுக்கு முழு அளவு தண்ணீரை கொண்டு வந்து சோ்த்தால்தான் கண்மாய்கள் நிரம்புவது மட்டுமின்றி விவசாயப்பணியும் திட்டமிட்டப்படி குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியும்.
நடப்பாண்டிற்கு தற்போது பாசன கால்வாயில் தண்ணீர் வந்தாலும் கொள்ளளவு குறைவதால் கண்மாய்கள் நிரம்புவதில் காலதாமதம் ஆகிறது. தண்ணீரை குறைவு இல்லாமல் வழங்கிட பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு பணி மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் ஆலோசனைப்படி பொதுப்பணித்துறையின் மற்ற பிரிவுகளில் உள்ள உதவிப்பொறியாளர்களை 2 மாத காலத்திற்கு பாசனக்கால்வாயில் பணி மேற்கொள்ள செயற்பொறியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் வரும் காலத்தில் நமது மாவட்டத்திற்கு தண்ணீர் அளவு சரியான முறையில் வரும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் சிவகங்கை முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், பெரியாறு பாசனக் கால்வாய் செயற்பொறியாளா் பவளக்கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனா் வடிவேல், சருகனியாறு கோட்ட செயற்பொறியாளர் சொர்ணகுமார், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை பொறியாளா் முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் கருப்பையா, ராமசாமி, பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலா்கள், பாசனக்கால்வாய் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.