மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
மரக்காணம் அருகே கொன்று புதைக்கப்பட்ட மாணவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் கைதான வாலிபர் தனது வாக்குமூலத்தில் மாணவனின் பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). மீனவர். இவரது மகன் தேவன்ராஜ் (வயது 13). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 8-ந் தேதி முதல் திடீரென்று மாயமானான்.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் புகார் செய்யப்பட்டதன்பேரில் மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குறிஞ்சி செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவன்ராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த அபினேஷ் (20) என்பவரை பிடித்து விசாரித்ததில் தேவன்ராஜை கொன்று கடற்கரையோரம் சவுக்குத் தோப்பில் புதைத்ததாக போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து அந்த இடத்தை அடையாளம் காட்ட அங்கு அபினேசை அழைத்துச் சென்றபோது மழையால் சேறும், சகதியுமாக இருந்ததாலும், இரவு பொழுதாகி விட்டதாலும் சிக்கல் ஏற்பட்டதால் அவரை மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர்.
தோண்டி எடுத்தனர்
இந்தநிலையில் நேற்று காலை 8½ மணியளவில் அபினேசுடன் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், மரக்காணம் தாசில்தார் உஷா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மைக்கேல் இருதயராஜ் (ஆரோவில்), சரவணன் (கோட்டக்குப்பம்), பாஸ்கர் (மரக்காணம்) மற்றும் வருவாய் அலுவலர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன், தடயவியல் நிபுணர் ராஜு மற்றும் டாக்டர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மாணவன் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர்.
அங்கு தேவன்ராஜ் புதைக்கப்பட்ட இடத்தை அபினேஷ் அடையாளம் காட்டினார். இதையடுத்து தேவன்ராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன்பின் அவனது உடல் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திடுக்கிடும் தகவல்
மாணவன் தேவன்ராஜை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசில் அபினேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கொலையான மாணவனின் தந்தை கோவிந்தராஜ் குடும்பத்துக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அபினேஷ் குடும்பத்துக்கும் பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கோவிந்தராஜின் ஒரே மகனை தீர்த்துக் கட்டுவதன் மூலம் அவரது குடும்பத்தை பழிவாங்கி விடலாம் என அபினேஷ் திட்டமிட்டுள்ளார்.
இதை நிறைவேற்றுவதற்காக பறவை பிடிக்கச் செல்லலாம் என்று கூறி நைசாக பேசி தேவன்ராஜை கடற்கரை சாலையில் உள்ள சவுக்குத்தோப்புக்கு அபினேஷ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் சரமாரியாக அடித்து தாக்கியதில் தேவன்ராஜ் மயங்கி விழுந்தான். இதன்பின் அவனது சட்டையை கழற்றி அதை வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பிணத்துடன் ஓரினச்சேர்க்கை
அதோடு விட்டு விடாமல் ஈவு இரக்கமின்றி தேவன்ராஜ் பிணத்துடன் அபினேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சவுக்குத்தோப்பு அருகே உள்ள சுடுகாட்டில் குழிதோண்டி மாணவனின் உடலை புதைத்துவிட்டு அபினேஷ் அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகு தன் மீது சந்தேகம் வராமல் இருக்க எதுவுமே தெரியாதது போல் தினமும் வேலைக்கு சென்று வந்ததுடன் நண்பர்களுடனும் அபினேஷ் சகஜமாக சுற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் காணாமல் போன தேவன்ராஜை கண்டுபிடிப்பதற்காக கூனிமேடு கிராமத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது அபினேஷ் தேவன்ராஜை அழைத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதை வைத்து துப்பு துலக்கியதில் அபினேஷ் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அபினேஷ் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கைதான அபினேஷ் போலீசாரால் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.