புதுவையில் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின கடலூர், விழுப்புரத்துக்கும் விரைவில் பஸ் போக்குவரத்து

புதுவையில் தனியார் பஸ்கள் நேற்று முதல் ஓடத்தொடங்கி உள்ளன. கடலூர், விழுப்புரத்துக்கு விரைவில் பஸ்கள் இயக்கப்படும் என அர தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-22 23:08 GMT
புதுச்சேரி, 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் புதுவையில் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் மாமூல் வாழ்க்கை திரும்பத் தொடங்கியது.

இதையொட்டி புதுவையில் சமூக இடைவெளியுடன் பயணிகள் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் அரசு பஸ்கள் சில இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்களை இயக்க அதன் உரிமையாளர்கள் மறுத்து விட்டனர். ஊரடங்கு காலத்தில் பஸ்கள் இயக்கப்படாத நிலையில் அதற்கான சாலை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று அவர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சாலைவரி

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி முதல் தமிழகத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின. அப்போது புதுவையில் தனியார் பஸ்களும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாலை வரியை ரத்து செய்தால் தான் பஸ்களை இயக்குவோம் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சாலையை வரியை ரத்து செய்ய தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

பஸ்கள் ஓடின

இதையடுத்து தனியார் பஸ்களை இயக்க அதன் உரிமையாளர்கள் முன்வந்தனர். அதன்படி நேற்று முதல் ஒரு சில தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின. கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் பயணிகளுக்கு கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அவர்கள் பயணம் செய்தனர்.

பஸ்சில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? கிருமிநாசினி வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆய்வு செய்தார். புதுவை புதிய பஸ் நிலையத்தில் தற்போது காய்கறி மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருவதால் தனியார் பஸ்கள் பஸ் நிலைய வெளிப்பகுதியில் இருந்து இயக்கப்பட்டன. ஆனால் பாகூர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப் படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடலூர், விழுப்புரத்துக்கு பஸ்கள்

கடந்த 7 மாதங்களாக பஸ்கள் ஓடாததால் பெரும்பாலான பஸ்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை பழுது பார்த்து முழு அளவில் இயக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதவிர கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசுக்கு புதுவை அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், விரைவில் அங்கிருந்து அனுமதி கிடைத்து விடும் என்றும் அதைத்தொடர்ந்து அனைத்து பஸ்களும் வழக்கம்போல் இயங்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்