சிகிச்சைக்கு வந்த பெண்ணை மானபங்கம் செய்த டாக்டர் கைது
சிகிச்சைக்கு வந்த பெண்ணை மானபங்கம் செய்த டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
தென்மும்பையை சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கு, நெற்றியில் தோல் நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதனால் அவர் காம்தேவி பகுதியில் கிளினிக் நடத்தி வரும் 78 வயதுயுடைய தோல் நோய் நிபுணரான டாக்டரை சந்தித்து சிகிச்சை பெறச்சென்றார். அங்கு டாக்டர் அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று, பரிசோதனை செய்வது போல் உடலில் தொட்டு மானபங்கம் செய்தார்.
ஆனால் அப்பெண் தவறுதலாக டாக்டர் தன்னை தொட்டு இருக்க கூடும் என கருதி இருந்துவிட்டார்.
கைது
இந்தநிலையில் 2 வாரம் கழித்து ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வரும்படி பெண்ணிடம், டாக்டர் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண் தனது 2 மகன்களுடன் கிளினிக்கிற்கு வந்தார். முதல் தடவை அப்பெண் அமைதியாக இருந்ததால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய டாக்டர் மறுபடியும் பெண்ணை மானபங்கம் செய்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், டாக்டரை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து காம்தேவி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரை கைது செய்தனர்.