அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது

விதவை பெண்ணுக்கு அடிக்கடி “மிஸ்டுகால்“ கொடுத்து உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமியை மரத்தில் கட்டி வைத்து அடித்துக்கொலை செய்தனர். இதுதொடர்பாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை குறித்து போலீசார் கூறியதாவது:-

Update: 2020-10-21 06:45 GMT
காரமடை,

கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்தவர் 32 வயதான பெண். இவரது கணவன் இறந்ததால், தனது குழந்தையுடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். கோவை ரத்தினபுரி அருள்நகரை சேர்ந்தவர் பெரியசாமி (46). இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து வசித்து வந்தார். வேலைக்கு செல்வதில்லை. இந்தநிலையில் பெரியசாமிக்கு அந்த பெண்ணின் செல் நம்பர் எப்படியோ கிடைத்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு பெரியசாமி மிஸ்டுகால் கொடுத்து வந்தார். போனை எடுத்தால் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த அந்த பெண் தன்னுடைய தாயாரிடம் கூறி அழுதார். இதனால் தாயும், மகளும் சேர்ந்து தன்னுடைய உறவினருக்கு பெரியசாமியின் பாலியல் தொந்தரவு குறித்து தகவல் கொடுத்தனர்.

இந்தநிலையில் அந்த பெண்ணிடம் போன்செய்த பெரியசாமி, மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருமாறும், அங்கு ஜாலியாக இருக்கலாம் என்றும் போனில் கூறி உள்ளார். இதனை கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அடிக்கடி போன் செய்து உல்லாசம் அனுபவிக்க துடித்த பெரியசாமியின் சபல புத்தியை தாயும், மகளும் அறிந்து கொண்டனர்.

இந்த நிலையில் பெரிய சாமியின் சபல புத்திக்கு பாடம் புகட்ட தாயும், மகளும் சேர்ந்து திட்டமிட்டனர். அதன் படி, அந்த பெண் பெரியசாமியிடம் நீங்கள் சொன்ன இடத்துக்கு வேண்டாம். வீட்டுக்கே வந்து விடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் வீட்டு முகவரியையும் கொடுத்தார். பழம் நழுவி பாலில் விழுவதாக நினைத்த சபல ஆசாமியான பெரிய சாமி, உடனே ஆசை, ஆசையாக காரமடை பகுதிக்கு வந்தார். ஏற்கனவே திட்டமிட்டப்படி மறைந்து இருந்த அந்த பெண்ணின் உறவினர்கள் பெரியசாமியை மடக்கிப்பிடித்து அங்குள்ள ஒரு வேப்பமரத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் தாயும், மகளும் சேர்ந்து சரமாரியாக கட்டையாலும், கைகளாலும் பெரியசாமியை அடித்து உதைத்துள்ளனர். இதற்கு உடந்தையாக உறவினர்களும் சேர்ந்து கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி அந்த இடத்திலேயே இறந்து போனார். இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும், காரமடை போலீசார் அங்கு விரைந்து சென்று பெரியசாமியின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காரமடை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மகளையும், தாயையும் கைது செய்தனர். மேலும் உறவினர்கள் லட்சுமணன், நித்யன், அவருடைய தந்தை ரகுநாதன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விதவை பெண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தவரை மரத்தில் கட்டிவைத்து தீர்த்து கட்டிய சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்