கூடலூர் அருகே, வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்
கூடலூர் அருகே வீட்டை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.
கூடலூர்,
கூடலூர் அருகே உள்ள நம்பிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டுயானை தாக்கி உயிரிழந்தார். இவருடைய மனைவி சாந்தகுமாரி தனது மகன்களுடன், அதே பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அருகில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நம்பிக்குன்னு பகுதிக்குள் காட்டுயானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து சாந்தகுமாரியின் வீட்டை முற்றுகையிட்டது. இதை அறிந்த அவர் தனது மகன்களுடன் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தார். பின்னர் அவரது வீட்டை காட்டுயானை சேதப்படுத்தியது. இதில் வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் உடைந்து விழுந்தது. தொடர்ந்து வீட்டில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தகுமாரி மற்றும் அவரது மகன்கள் பயத்தில் அலறினர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காட்டுயானை வனத்துக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் தயானந்தன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட சாந்தகுமாரி சேதமடைந்த வீடு மற்றும் உடமைகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.