“என்னை யாரும் மிரட்டவில்லை; யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை” ‘நீட்’ சாதனை மாணவர் ஜீவித்குமார் பரபரப்பு வீடியோ

‘நீட்’ தேர்வில் சாதித்த தன்னை யாரும் மிரட்டவில்லை என்றும், தன்னை யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை என்றும் தேனி மாணவர் ஜீவித்குமார் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Update: 2020-10-21 06:15 GMT
தேனி,

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் ஜீவித்குமார். இவர் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்தார். பின்னர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்று கடந்த மாதம் ‘நீட்’ தேர்வு எழுதினார். இந்த தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்றார். இதன்மூலம் அவர் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற சாதனையை படைத்தார். மேலும் தனக்கு பலரும் உதவியதாக மாணவர் ஜீவித்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு பிறகு ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா என்பவர் சமூக வலைத்தளத்தில் மாணவர் ஜீவித்குமாரை பாராட்டி வீடியோக்கள் வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு வீடியோவில், “மாணவர் ஜீவித்குமாரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தத்தெடுத்து ‘நீட்’ தேர்வு எழுத வைத்தோம். அவர் இந்திய அளவில் சாதனை படைத்து இருக்கிறார். அவர் சபரிமாலாவின் பிள்ளை என்று சொல்லிக்கொள்வதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். இது என்னுடைய வெற்றியாக அறிவிப்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பா.ஜ.க.வினர் அவருடைய வீட்டுக்கு சென்று பொன்னாடை அணிவித்து அவரை மிரட்டி வந்துள்ளனர்“ என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மாணவர் ஜீவித்குமார் ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் ‘நீட்’ தேர்வில் சாதனை படைக்க எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர். அங்குள்ள ஆசிரியர்கள் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தனர். பள்ளியின் பகுதிநேர ஆசிரியர் அருள்முருகன் எனக்கு நிறைய வழிகாட்டுதல்கள் வழங்கினார். ஆசிரியை சபரிமாலாவும் எனக்கு உதவி செய்துள்ளார். அவர் பள்ளி முன்பு வைத்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்று கேட்டு ஒரு வீடியோ எடுத்தார். அப்போது நான் தேர்ச்சி பெற முடியும் என்று சொன்னேன். அந்த வீடியோவை முகநூலில் அவர் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்துவிட்டு அமெரிக்காவில் இருந்து காட்வின் என்பவர் எனக்கு உதவி செய்தார்.

எனது வெற்றிக்கு நிறைய பேர் உதவி செய்துள்ளனர். கட்சிக்காரர்கள் வந்து என்னை மிரட்டியதாக சபரிமாலா ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். என்னை யாரும் மிரட்டவில்லை. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நிறைய பேர் எனக்கு வாழ்த்து சொன்னார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

என்னை தத்தெடுத்ததாக சபரிமாலா சொல்லி இருந்தார். என்னுடைய அப்பா, அம்மாவுக்கு தான் நான் மகன். என்னை யாருக்கும் தத்துக்கொடுக்கவில்லை. என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் சபரிமாலா இதுபோன்ற தகவல்களை பதிவிட வேண்டாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாணவரை மையப்படுத்தி இருவேறு அரசியல் நிகழ்ந்து வருகிறது. ஒரு தரப்பினர் அரசு பள்ளியில் படித்த மாணவர் சாதனை படைத்ததால் ‘நீட்’ தேர்வு எளிதானது என்றும், ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வரம் இந்த தேர்வு என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பில், அரசு பள்ளி மாணவராக இருந்தாலும் தனியார் பயிற்சி மையத்தில் பணத்தை செலவு செய்து, ஒரு ஆண்டு பயிற்சி பெற்ற பின்னரே ‘நீட்’ தேர்வில் சாதிக்க முடிந்துள்ளதாக கூறியதோடு, இந்த தேர்வுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்