திருச்சி- கரூர் சாலை அகலப்படுத்துதல், மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலை பணிகள் தீவிரம் - மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்

திருச்சி- கரூர் சாலை அகலப்படுத்தும் பணியும், மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலை பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

Update: 2020-10-20 22:15 GMT
சமயபுரம்,

திருச்சி- கரூர் சாலை குடமுருட்டி பாலத்தில் இருந்து திண்டுக்கரை வரை சுமார் 11 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிகவும் குறுகலான, அதே நேரத்தில் அபாயகரமான வளைவுகள் நிறைந்து இருந்தது. இந்த சாலையில் அடிக்கடி உயிர்பலி வாங்கும் விபத்துக்கள் நடைபெற்றதால் அதனை தடுக்க ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.55¾ கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பணியானது கடந்த மே மாதம் 27-ந் தேதி தொடங்கியது. ஒருபுறம் காவிரி ஆறு, இன்னொருபுறம் ரெயில்வே தண்டவாளம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ள இந்த சாலையானது தற்போது உள்ள 7 மீட்டர் அகலத்தில் இருந்து இருந்து 10.80 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக காவிரி ஆற்றின் கரையில் 1785 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவரும், காவிரி கரை பகுதியில் 3,895 மீட்டர் நீளத்திற்கு பாதுகாப்பு சுவரும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் காவிரி கரையில் உள் சாய்தளம் வலுப்படுத்தும் பணியானது 350 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 55 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒப்பந்தபடி இந்த பணிகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே வருகிற மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

இதேபோல திருச்சி- துறையூர் சாலையில் மண்ணச்சநல்லூர் நகரத்திற்கு ரூ.25 கோடியே 15 லட்சத்தில் 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியானது கடந்த மே மாதம் 25-ந் தேதி தொடங்கியது.

இந்த பணிக்காக பெருவளை, புள்ளம்பாடி வாய்க்கால் உள்ளிட்ட 12 பாசன வாய்க்கால்களில் பாலங்களும், மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் 4 பாலங்களும், 4 சிறு பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் 5 இடங்களில் சாலை சந்திப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பணியை ஆய்வு செய்த கலெக்டர், மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் வருகிற மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். இந்த புறவழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தால், மண்ணச்சநல்லூர் நகரத்திற்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது என்றார்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர்கள் ரவிக்குமார், அரிகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் வீரமணி, விவேகானந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்