வக்கீல் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை: உறவினர்கள் 4 பேர் கைது - சொத்து பிரச்சினையில் தீர்த்துக்கட்டியது அம்பலம்

நாச்சியார்கோவில் அருகே வக்கீல் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வக்கீலின் உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக வக்கீல் உள்பட இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2020-10-20 22:15 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குப்பாங்குளம் கிளாரட்நகர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ்(வயது40). வக்கீலான இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சாவூர் கிழக்கு பகுதி வக்கீல் பிரிவு செயலாளராகவும் இருந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்தை பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது குறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது உறவினரின் கைவிரலை காமராஜ் கடித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் கிளாரட் நகர் பகுதியில் காமராஜூம் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(35) என்பவரும் வந்த போது ஒரு கும்பல் இவர்கள் இருவரையும் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் உடல் முழுவதும் வெட்டுக்காயமடைந்த காமராஜ், சக்திவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

நேற்று வக்கீல் காமராஜ் மற்றும் அவரது நண்பர் சக்திவேலின் உடல்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அசம்பாவிதங்களை தவிர்க்க கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஸ்முக்சேகர்சஞ்சய் ஆகியோர் கும்பகோணத்தில் முகாமிட்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இந்தநிலையில் நாச்சியார்கோவில் போலீசார், வக்கீல் காமராஜ், சக்திவேல் கொலை தொடர்பாக கிளாரட்நகர் பகுதியை சேர்ந்த வக்கீல் காமராஜின் உறவினர்களான ராஜவேலு மகன் ஆனந்த்(33), அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற ராஜசேகர்(45), சசிகுமார்(41), சம்பத்(22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலைகள் நடந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்