ரூ.1¼ கோடி நில மோசடி; தந்தை, மகன் கைது

ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பிலான நில மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-10-20 22:53 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் செங்கழுநீரோடை வீதி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஸ்ரீநாத் பாலாஜி. இவர்களுக்கு சொந்தமாக காஞ்சீபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பிலான 2 ஏக் கர் 30 சென்ட் நிலம் உள்ளது.

காஞ்சீபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மகன் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிலத்தை வாங்க முடிவு செய்து அதற்கான முன்பணமாக ரூ.80 லட்சம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட நாகராஜ் இதுவரை நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமலும் கொடுத்த பணத்தை திரும்ப அளிக்காமலும் மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து ரவிச்சந்திரன் காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையில் நாகராஜ் மற்றும் அவரது மகன் ஸ்ரீநாத் பாலாஜி திருப்புட்குழியிலுள்ள நிலத்தை ஏற்கனவே கண்ணன் என்பவருக்கு ஒப்பந்தம் செய்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. ஒரே சொத்தை இரு வேறு நபர்களிடம் காண்பித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

தந்தை, மகன் கைது

காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு நில அபகரிப்பு மற்றும் பொருளாதார குற்றவியல் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட நாகராஜ் மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்