ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

ஓடும் பஸ்சில் டிரைவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் தாறுமாறாக சென்ற பஸ் சிக்னல் கம்பம் மீது மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக 9 பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2020-10-20 21:04 GMT
மும்பை,

ஊரடங்கில் தளர்வு காரணமாக மும்பையில் இருந்து தானே, நவிமும்பை, மிராபயந்தர் என மாநகராட்சி சார்பில் 4 ஆயிரம் பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 30 லட்சம் பயணிகள் தினந்தோறும் பயணம் செய்து வருகி்ன்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் செம்பூரில் இருந்து டாடா பவர் ஹவுஸ் நோக்கி பெஸ்ட் பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் ஹரிதாஸ் பாட்டீல் ஓட்டிச்சென்றார். மேலும் பஸ்சில் போலீஸ்காரர் உள்பட 9 பயணிகள் அமர்ந்திருந்தனர்.

டிரைவருக்கு நெஞ்சுவலி

பசந்த் திரையரங்கம் அருகே பஸ் சென்ற போது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் பஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தம்போட்டனர். இதற்கிடையே நடைபாதையில் ஏறிய பஸ் அங்கிருந்த காய்கறி தள்ளுவண்டியில் மோதியதுடன் போக்குவரத்து சிக்னல் கம்பம் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதையடுத்து பஸ்சில் இருந்த போலீஸ்காரர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் ஆம்புலன்சுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் டிரைவர் ஹரிதாஸ் பாட்டீலை மீட்டு அருகில் உள்ள ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். காலை நேரத்தில் பெஸ்ட் பஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்