வேலூரில், வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2020-10-20 06:00 GMT
வேலூர்,

வேலூர் அருகே உள்ள அலமேலுமங்காபுரம் பேங்க்மேன் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 34). இவர் சென்னையில் உள்ள தனியார் ரசாயன கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (27). ஜெயராஜ் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்தனர். இதையடுத்து அவர்கள் ஜெயராஜுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஜெயராஜ் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கேட்டு பூட்டை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் யாரும் இல்லாத போது மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து, 19 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயராஜ் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

வேலூர் அருகே மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்