நாட்டறம்பள்ளி அருகே, கோவில் குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி - தாமரை பூவை பறிக்க போட்டி போட்டபோது பரிதாபம்

நாட்டறம்பள்ளி அருகே கோவில் குளத்தில் தாமரை பூவை பறிக்க போட்டிபோட்டபோது ஆட்டோ டிரைவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவருடைய உடலை தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி மீட்டனர்.

Update: 2020-10-20 05:00 GMT
ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராகரம் வேடி வட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40) இவர் புதுப்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று காலை தனது நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் 5 பேருடன் அக்ராகரம் மலையடிவாரத்தில் உள்ள கோவில் குளக்கரையில் அமர்ந்து மது அருந்தி விட்டு குளத்தில் குளித்தனர்.

அப்போது குளத்தில் இருக்கும் தாமரை பூவை பறித்து வர போட்டிபோட்டு உள்ளனர். இதில் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் இருவர் குளத்திற்குள் சென்றனர். அப்போது திடீரென ஆறுமுகம் தண்ணீரில் மூழ்கினார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது நண்பர்கள் ஆறுமுகத்தின் உறவினர்கள் மற்றும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் விரைந்து சென்ற நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா தலைமையிலான வீரர்கள் நேற்று காலை 11 மணி முதல் ஆறுமுகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் ஆறுமுகத்தை மீட்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து குளத்தின் மதகை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர்.

அதன் பிறகு சேற்றில் சிக்கியிருந்த ஆறுமுகத்தை பிணமாக மீட்டனர். தொடர்ந்து ஆறுமுகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாட்டறம்பள்ளி தாசில்தார் சுமதி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இந்த சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்துடன் மதுகுடித்த 5 ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்