கொரோனாவுக்கு 2 பேர் பலி: டாக்டர் உள்பட 86 பேருக்கு தொற்று உறுதி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மேலும் டாக்டர் உள்பட 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-20 04:45 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22 ஆயிரத்து 500 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 21 ஆயிரத்து 236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது வரை 261 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் 86 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இவர்களில் காட்டுமன்னார்கோவில் மற்றும் என்.எல்.சி. குடியிருப்பு பகுதியை சேர்ந்த 2 கர்ப்பிணிகளுக்கும், சிதம்பரத்தை சேர்ந்த டாக்டருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 23 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதன் விவரம் வருமாறு:-

கடலூரை சேர்ந்த 60 வயது பெண் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 97 வயது முதியவர் சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையிலும் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

நேற்று மட்டும் 95 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 21 ஆயிரத்து 331 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 985 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்