செஞ்சேரியில், வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

செஞ்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-10-19 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் உள்ள இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 34). சிமெண்டு கலவை எந்திரம் வைத்து வாடகைக்கு விடுவதுடன் கட்டிட பணிக்கும் சென்று வருகிறார். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை 10 மணியளவில் பெரம்பலூரில் உள்ள வங்கிக்கு சென்றிருந்தாராம். பின்னர், அங்கிருந்து மதியம் 1 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு செந்தில்குமார் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு செந்தில்குமார் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவஹர்லால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த திருட்டு குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவம் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்