கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக தேங்கி கிடக்கிறது: தொடர் மழையால் நனைந்த நெல், முளைத்து வரும் அவலம் - விரைவாக கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் குவியல், குவிலாக தேங்கி கிடக்கும் நெல், தொடர் மழையால் முளைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2020-10-19 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 948 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் 274 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதிக அளவில் நெல் விளைச்சல் உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வந்ததால் மழை நின்றவுடன் விவசாயிகள் ஒரே நேரத்தில் நெல் அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரக்கூடிய நெல் வரத்தும் அதிகமாக இருந்தது. கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகரித்தது.

ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் 300 முதல் 500 மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் குவியல், குவியலாக கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கிறது. இந்த நெல்லை இரவு, பகலாக விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையில் நனையாமல் இருக்க நெல்லை தார்பாய் மூலம் மூடி வைத்துள்ளனர். அதையும் தாண்டி மழைநீர் புகுந்து நெல்மணிகள் நனைந்து விட்டதாலும், நனைந்த நெல் முளைத்து விட்டதாலும் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கரந்தை, மருங்குளம், தென்னமநாடு, சேதுராயன்குடிக்காடு, கோவிலூர், கொல்லாங்கரை உள்ளிட்ட பல கொள்முதல் நிலையங்களில் 10 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு மேலாக நெல் தேக்கம் அடைந்துள்ளது. பகல் நேரங்களில் மழையில் நனைந்த நெல்மணிகளை வெயிலில் உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பின்னர் அந்த நெல்லை குவித்து தார்பாயை கொண்டு மூடி பாதுகாத்தாலும் மாலை நேரங்களில் மீண்டும் பெய்யும் மழையால் நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் அவலநிலை உள்ளது.

நெல்மணிகள் மழையில் நனைவதால் ஈரப்பதம் அதிகமாகிறது. நெல்லை மறுபடியும் வெயிலில் உலர்த்தி ஈரப்பதத்தை குறைந்து மெஷினில் தூசி இல்லாமல் தூற்றி விற்பனை செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் நாளொன்றுக்கு 500 மூட்டைக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்படாததால் ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த நெல் மூட்டைகளும் தொடர்ந்து பெய்து வரும் மழையில் நனைகிறது. இதனால் தமிழக அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்றும்(திங்கட்கிழமை) தொடர்ந்து 4-வது நாளாக மழை பெய்தது. தொடர் மழையால் குவித்து வைத்துள்ள நெல் மட்டுமின்றி கொள்முதல் செய்யப்பட்ட நெல்லும் நனைந்து முளைத்து வருகிறது.

எனவே ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை 21 சதவீதமாக உயர்த்தி கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் எனவும், ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாது திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் நெல் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது.

மேலும் செய்திகள்