சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசி உணவை சேர்க்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் - சேகோசர்வ் சேர்மன் தமிழ்மணி தகவல்

சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசி உணவை சேர்க்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சேகோசர்வ் சேர்மன் தமிழ்மணி தெரிவித்தார்.

Update: 2020-10-19 06:22 GMT
பனமரத்துப்பட்டி,

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சேகோசர்வ் சேர்மன் தமிழ்மணி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் சதீஷ் முன்னிலை வகித்தார்.

இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டனர். மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் வாழ்வு சிறக்க ஜவ்வரிசிக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசியை சேர்க்க தமிழக முதல்-அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும், மரவள்ளி விவசாயிகளுக்காக விரைவில் முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து பேசினர்.

இதற்கு சேகோசர்வ் சேர்மன் தமிழ்மணி பதில் அளித்து பேசும் போது, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் தமிழக முதல்-அமைச்சரிடம் தெரிவித்து உடனே நிறைவேற்ற வழிவகை காணப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் சேகோசர்வ் மேலாளர்கள் ரவிக்குமார், நந்தகோபால், மஞ்சுரேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் சேகோசர்வ் சேர்மன் தமிழ்மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்து உள்ளனர். இதில் முக்கியமானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மரவள்ளிக்கிழங்கு மாவு முழுமையாக தடை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளனர். இது குறித்து தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து மத்திய அரசுக்கு வலியுறுத்த முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

வெளிநாடுகளில் இருந்து மரவள்ளிக்கிழங்கு மாவு எனப்படும் ஸ்டார்ச் இறக்குமதி செய்ய தடை விதிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சத்துணவு திட்டத்தில் ஜவ்வரிசி உணவை சேர்க்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

சேகோசர்வ் தொழிலில் இடைத்தரகர்கள் இல்லாமல் செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இடைத்தரகர்கள் இன்றி சேகோசர்வ் நிர்வாகம் மரவள்ளிக்கிழங்கை நேரில் கொள்முதல் செய்து அதை ஆலைகளுக்கு தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சேகோசர்வ் சேர்மன் தமிழ்மணி கூறினார்.

மேலும் செய்திகள்